குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை தோகைமலை அருகே பரிதாபம்
தோகைமலை அருகே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.
தோகைமலை,
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கீழவெளியூர் தென்னகரையை சேர்ந்தவர் அரவிந்த். இவரது மனைவி வாசுகி (வயது 23). அரவிந்த் மற்றும் அரவிந்தின் அண்ணன் பிரபு ஆகிய இருவரும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். அரவிந்த் வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். தினமும் குடும்பத்தில் யாராவது ஒருவர் ஆடு, மாடுகளை மேய்த்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
அவ்வப்போது ஆடு, மாடுகளை யார் மேய்ப்பது என்று அரவிந்த் மனைவி வாசுகி மற்றும் பிரபு மனைவி சகுந்தலாவிற்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் வழக்கம் போல் ஆடு மாடுகளை மேய்ப்பது தொடர்பாக வாசுகிக்கும், சகுந்தலாவிற்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதனால் மனம் உடைந்த வாசுகி வீட்டில் அரளிவிதையை அரைத்து தனது குழந்தைகளான தர்ஷன் (3) மற்றும் 7 மாத குழந்தை சன்ஜித்திற்கும் கொடுத்துவிட்டு அவரும் தின்றுள்ளார். இந்தநிலையில் வேலைக்கு சென்றிருந்த அரவிந்த் மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது வாசுகி சோர்வாக இருந்துள்ளார். இதுகுறித்து தனது மனைவியிடம் கேட்டபோது தானும், குழந்தைகளும் அரளி விதையை சாப்பிட்டு உள்ளோம் என்று வாசுகி தெரிவித்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் வாசுகியையும், குழந்தைகளையும் கார் மூலம் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வாசுகி இறந்தார்.
குழந்தைகள் தர்ஷன் மற்றும் சன்ஜித் ஆகிய இருவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வாசுகியின் தந்தை கார்ணாம்பட்டியை சேர்ந்த ரெங்கராஜ் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து குளித்தலை கோட்டாட்சியர் லியாகத் அலியும் விசாரணை நடத்தி வருகிறார்.