இந்திய மருத்துவ கவுன்சில் குழுவின் ஆய்வு முடிந்தது: கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் விரைவில் மாணவர் சேர்க்கை?
இந்திய மருத்துவ கவுன்சில் குழுவினரின் ஆய்வு முடிந்ததையொட்டி, கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் விரைவில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர்,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில், கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து கரூர் அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் காந்திகிராமம் பகுதியில் 27 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.269 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இந்த கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்தி வகுப்புகள் தொடங்குவதற்கு ஏதுவாக வகுப்பறை, விடுதி, ஆய்வகம் உள்ளிட்ட கட்டிட கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டன. எனினும் மற்ற கட்டிடங்களில் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளும் இன்னும் 6 மாதத்தில் முடிந்துவிடும் என கட்டிட பொறியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் நாக்பூரை சேர்ந்த கதிரியக்க (ரேடியாலஜி) சிகிச்சை துறையின் பேராசிரியர் பூர்ணசந்திரா கே.லாங்காரி மற்றும் கர்நாடகாவை சேர்ந்த சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் சுனில் அரமணி ஆகியோர் அடங்கிய புதுடெல்லி இந்திய மருத்துவ கவுன்சில் குழுவினர், கரூருக்கு வந்தனர். பின்னர் அவர்கள் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டனர். அப்போது முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்க போதிய வசதிகள் இருக்கின்றனவா? மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து கற்பிக்கும் வகையில் போதிய டாக்டர்கள், பேராசிரியர்கள் உள்ளனரா? என்பன உள்ளிட்டவற்றை கேட்டறிந்தனர். மேலும் மருத்துவமனையில் உள்ள மருத்துவ உபகரணங்களையும் பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது மருத்துவக்கல்லூரி டீன் ரோஸி வெண்ணிலா, இருக்கை மருத்துவ அதிகாரிகள் (ஆர்.எம்.ஓ.) பானுமதி, பிரபாகரன், கண்காணிப்பு அலுவலர் டாக்டர் சிவராமன், டாக்டர் முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஆய்வின் முடிவில் அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகத்திற்கு சான்றிதழை, அந்த குழுவினர் வழங்கினர். மேலும் இது தொடர்பான அறிக்கையை, புதுடெல்லியில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சிலில் அந்த குழுவினர் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ கவுன்சில் ஆய்வு முடிவடைந்து விட்டதால் விரைவில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்று, வருகிற ஆகஸ்டு மாதத்தில் வகுப்புகள் தொடங்க வாய்ப்பு இருக்கிறது. இதையொட்டி உடற்கூறு இயல் ஆய்வகத்தில் அரசு விதிப்படி, ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு இறந்து போன 15 பேரின் உடல்கள் தயாராக இருக்கிறது.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் முடிவடைந்து, மே 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால் அதுவரை திறப்பு விழாவுக்கு வாய்ப்பு இல்லை. எனவே அதற்கு பிறகு திறப்பு விழா காணப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என கரூர் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.