மாவட்டத்தில் இயற்கை பேரிடர்கள் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை பேரிடர்கள் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரி,
தமிழகத்தில் வருகிற 29, 30, 1 ஆகிய தேதிகளில் மழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, புயல் நாட்களில் இயற்கை இன்னல்களால் ஏற்படும் இழப்புகளை தவிர்ப்பது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு 3 நாட்களில் மழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் நாட்களில் இயற்கை இன்னல்களால் இழப்புகள் ஏற்படாதவாறும், பொருட்சேதங்களை தவிர்க்கும் வகையிலும் முன்னெச்சரிக்கையுடன் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
உதவி கலெக்டர்கள் தாலுகா அளவில் அனைத்து துறை ஒருங்கிணைப்பு குழு அமைத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். அதிகமாக பாதிக்கப்பட கூடிய இடங்களை கண்டறிந்து கிராம அளவில் உள்ள குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். உடனடியாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்களை தணிக்கை செய்து அறிக்கை அளிக்க வேண்டும். மேலும் சுகாதார துறை சார்பாக மருந்துகள், முதலுதவி சாதனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அதே போல வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் சாலைகளில் மரம் விழுந்தால் அதை அகற்றுவதற்கு பொக்லைன் எந்திரங்கள் மற்றும் மரம் அறுக்கும் எந்திரம் வைத்திருக்க வேண்டும்.
மின்சாரத்துறையினர் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். வருவாய்த்துறை சார்பில் ஒலிப்பெருக்கி மற்றும் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, மாவட்ட கலெக்டரின் நேர் முக உதவியாளர் ( பொது) ராமமூர்த்தி, உதவி கலெக்டர்கள் சரவணன், விமல்ராஜ், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார், துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சுசீலா, செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் சேகர், பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் மதுசெழியன் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், தீயணைப்புத்துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.