சின்னாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை அகலப்படுத்த வேண்டும் மலைவாழ் மக்கள் கோரிக்கை
சின்னாற்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தளி,
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை, ஈசல் தட்டு, பொறுப்பாறு, கோடாந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சக்கொட்டாம்பாறை, குழிப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளார்கள்.
அதுவும் இயற்கை முறையில் நெல், தினை, சாமை, ராகி, இஞ்சி, மரவள்ளி, தென்னை, வாழை, எலுமிச்சை, பட்டர்பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யப்படுகின்றன. வடுமாங்காய், நெல்லிக்காய், தேன், கடுக்காய் உள்ளிட்டவை வனப்பகுதியில் இயற்கையாக விளைகின்றன. மலைவாழ் மக்கள் சுயதொழிலாக ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, தைலம் காய்ச்சுதல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு முழுவதும் நிரந்தரமான வருமானம் மலைவாழ் மக்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் சீசனுக்கு ஏற்றாற்போல் மலைப்பகுதியில் விளையக்கூடிய பொருட்களும் சுயதொழிலும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுகின்ற சரிவை சமன் செய்து வருகிறது.
ஒரு சில மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு மட்டும் வாகனங்கள் சென்று வருவதற்கு வனப்பகுதிக்குள் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற குடியிருப்புகளில் வசித்து வருகின்ற மலைவாழ் மக்கள் வனவிலங்குகளால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையடி பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எதிர்பாராத விதமாக மனிதன்- வனவிலங்கு மோதல்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
அப்போது நிகழ்கின்ற விபத்தில் உடல் ஊனமும், உயிர்ச்சேதமும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக பாதை வசதி இல்லாத மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு பாதையை அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை நிறைவேற்றப்படவில்லை. வாகன வசதி இல்லாததால் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கோ, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கோ மற்றும் அவசரகால மருத்துவ வசதியை பெறுவதற்கோ மலைவாழ் மக்கள் அதிக இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் தளிஞ்சி, தளிஞ்சிவயல், மஞ்சம்பட்டி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு தமிழக வனப்பகுதியில் வனத்துறை சார்பில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் பாதை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த பாதையின் குறுக்காக ஓடுகின்ற கூட்டாற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
இதனால் தளிஞ்சி, தளிஞ்சிவயல் மஞ்சம்பட்டி, மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் பாதை துண்டிக்கப்பட்டு தனித்தீவாகி விடுகின்றன. அப்போது அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் மாற்றுப் பாதையான கேரளா மாநிலத்தில் உள்ள சம்பக்காட்டுப்பாதையை பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். அப்போது முன்னறிவிப்பு இல்லாமல் கேரளா வனத்துறையினர் பாதையை அடைத்து விடுவது தொடர்கதையாக உள்ளது.
மேலும் தளிஞ்சி உள்ளிட்ட குடியிருப்புகளுக்கு செல்வதற்கு சம்பக்காட்டுப்பாதை எளிதாக இருப்பதாக மழைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் தமிழக வனப்பாதையை விடவும் இந்த பாதையின் வழியாக விரைந்து செல்லவும் முடியும் தூரமும் குறைவு. இந்த பாதையில் சின்னாறு குறுக்கிடுவதால் மலைவாழ் மக்கள் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு சென்று வருவதற்கு ஏதுவாக சம்பக்காட்டு பகுதியில் ஒற்றையடி உயர்மட்ட பாலம் ஒன்று பல வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டது. அந்த பாலம் அதிகாரிகளால் முறையாக பராமரிப்பு செய்யப்படவில்லை.
இதனால் பாலத்தில் கட்டப்பட்டுள்ள பக்கவாட்டுச்சுவர்கள் மற்றும் தூண்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும் மழைக்காலங்களில் விளைபொருட்களை மலைவாழ் மக்கள் இருசக்கர வாகனங்கள் மூலமாக உயர்மட்ட பாலத்தின் வழியாகவே விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள். அப்போது அதில் செல்கின்ற இருசக்கர வாகன ஓட்டிகள் கரணம் தப்பினால் மரணம் என்ற சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். எனவே சம்பக்காட்டில் சின்னாற்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ள பாலத்தில் சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும். அத்துடன் அந்த பாலத்தை அகலப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.