குமரி மாவட்டத்தில் விடுபட்ட வாக்காளர்கள் மீண்டும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு கலெக்டர் அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சி மனு

குமரி மாவட்டத்தில் விடுபட்ட வாக்காளர்கள் மீண்டும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2019-04-26 23:15 GMT
நாகர்கோவில், 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் குமரி மாவட்ட தலைவர் காதர் மைதீன் தலைமையில் செய்யது, உவைஸ், பாஸில், பயஸ், ஜிஸ்தி முகமது ஆகியோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் கடந்த 18-ந் தேதி கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால் இந்த வாக்குப்பதிவில் ஆயிரக்கணக்கான சிறுபான்மையின வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லை.

அடையாள அட்டை, ஓட்டு போடுவதற்கான பூத் சிலிப் இருந்தும் வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர்கள் இல்லை. இது திட்டமிட்டு நடந்ததாக பொதுமக்கள் மத்தியில் கருதப்படுகிறது.

மாவட்ட கலெக்டராகிய தாங்கள் தான் தேர்தல் அதிகாரியாக இருந்து வருகிறீர்கள். தேர்தல் நடக்கும் 3 வாரத்துக்கு முன்பு தாங்கள் இறுதியாக விடுபட்ட வாக்காளர்களின் பெயர் சேர்க்கும் முகாம், சரிபார்க்கும் முகாம், பெயர் சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இது மாவட்ட நிர்வாகத்தின் வேலை. அதை தாங்கள் செயல்முறைப்படுத்தவில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் தான் காரணம்.

இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் வரும் இடைத்தேர்தலையொட்டி குமரி மாவட்டத்தில் விடுபட்ட வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்