காட்டுயானைகளை விரட்டும்போது கல்வீசக்கூடாது, பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவுரை

காட்டுயானைகளை விரட்டும்போது கல்வீசக்கூடாது என்று பொதுமக்களிடம் வனத்துறையினர் துண்டுபிரசுரங்களை வினியோகித்து அறிவுரை வழங்கினர்.

Update: 2019-04-25 21:45 GMT
மேட்டுப்பாளையம்,

கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிறுமுகை வனச்சரகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் காட்டு யானை மற்றும் பிற வன விலங்குகள் கூட்டம், கூட்டமாக நடமாடி வருகின்றன. வனப்பகுதியில் தற்போது நிலவும் கால நிலையால் உணவு மற்றும் நீர்நிலைகளை தேடி அலையும் காட்டு யானைகள் சில நேரங்களில் இடம் பெயர்ந்து வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்து விவசாய விளைபொருட்களை நாசம் செய்து வருகின்றன.

இதனால் ஒருசில நேரங்களில் மனித- வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுக்கும் விதமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் அறிவுறுத்தலின்பேரில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் தலைமையில் வனத்துறையினர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு சென்று வினியோகம் செய் தனர்.

அதில் சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் இரவு நேர பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வனத்துறையினர் யானைகளை விரட்டும்போது யானைகள் மீது கல்வீச வேண்டாம். யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியில் வெளிச்சம் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

வனத்தை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் யானைகள் நுழைந்தால் வனத்துறைக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். கம்பிவேலியில் நேரடியாக உயர் அழுத்த மின்சாரத்தை செலுத்த கூடாது என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடுகளின் முன்பு ஒட்டியும், கிராம மக்களிடம் வினியோகமும் செய்தனர்.

மேலும் செய்திகள்