தேர்தல் தோல்வி பயத்தால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை எதிர்க்கட்சியினர் குறை கூறுகிறார்கள் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

தேர்தல் தோல்வி பயத்தால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை எதிர்க்கட்சிகள் குறை கூறுகிறார்கள் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Update: 2019-04-25 23:27 GMT
மும்பை,

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மராட்டிய மாநிலம் நாலச்சோப்ராவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பால்கர் தொகுதி சிவசேனா வேட்பாளர் ராஜேந்திர காவித்தை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே பலமுறை நிரூபித்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பது காங்கிரசுக்கு தெரியும். அந்த தோல்வி பயம் காரணமாக தான் வாக்குப்பதிவு எந்திரத்தை குறை கூற தொடங்கி உள்ளனர். நீங்கள் (காங்கிரஸ்) 3 மாநில தேர்தலில் வெற்றி பெற்றபோது வாக்குப்பதிவு எந்திரம் சரியாக வேலை செய்தது. ஆனால் தோற்றால் வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி நடந்துவிட்டது என கூறுவீர்கள்.

பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும்

வரும் காலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும். எங்களை வீழ்த்த உலகில் எந்த சக்தியும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 4-ல் 3 பங்கு இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெறும். ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் நாட்டில் வறுமையை ஒழிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் வெற்றி பெறவே முடியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்