தாராவியில் குடிசை வீடு இடிந்து சிறுமி உள்பட 8 பேர் படுகாயம்
தாராவியில் குடிசை வீடு இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி சிறுமி உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
மும்பை,
மும்பை தாராவி 60 அடி சாலை சேஷ்வாடி பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் நேற்று சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்தது. மதியம் 1.30 மணியளவில் அந்த வீட்டின் மேல்தளத்தில் கட்டப்பட்டு இருந்த சுவர் திடீரென இடிந்து அருகில் உள்ள 2 வீடுகள் மீது விழுந்தது. இதில் அந்த வீடுகளும் இடிந்தன.
அந்த வீடுகளில் இருந்த 8 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் படுகாயம் அடைந்து துடித்தனர். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
8 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளை அகற்றி காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சயான் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விசாரணையில், காயம் அடைந்தவர்கள் முகமது ரபிக் (வயது22), ஜகான் அராகான் (40), சேக் முகமது ரிஸ்வான் (15), முகமது ராகாஜித்தா (22), பப்பு யாதவ் (22), நாவல் ராய் (24), ருக்கியா பானு (17) மற்றும் சிறுமி ரேஷ்மி கான்(5) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இந்த விபத்து தொடர்பாக தாராவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிசை வீடு இடிந்து 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் தாராவியில் சோகத்தை ஏற்படுத்தியது.