பொதுமக்களின் உரிமைகள்,சுதந்திரத்திற்கு நீதிபதிகள் இறுதி பாதுகாவலர்கள் - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு

பொதுமக்களின் உரிமைகள்,சுதந்திரத்திற்கு நீதிபதிகள் இறுதி பாதுகாவலர்கள் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில் ரமணி தெரிவித்தார்.

Update: 2019-04-25 23:00 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையம் தாலுகா அலுவலகம் எதிரே ரூ.9 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டிடம் மற்றும் நீதிபதிக்கான குடியிருப்புக் கட்டிடத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கே. தஹில் ரமணி திறந்து வைத்தார்.

பின்னர் மதுரை சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவகாசியில் ரூ.16 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டிடம் மற்றும் நீதிபதிக்கான குடியிருப்புக் கட்டிடத்தினையும், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்ற கட்டிடத்தின் கல்வெட்டுகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.49 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள நீதிபதிகளுக்கான குடியிருப்புக் கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி, அப்துல் குட்ஹாஸ், புகழேந்தி, மாவட்ட தலைமை நீதிபதி முத்துசாரதா மற்றும் நூற்றுக்கணக்கான வக்கீல்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி தஹில்ரமணி பேசியதாவது:-

கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் தமிழக அரசு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் கட்டுவதற்காக ரூ. 9கோடியே 64 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் 2 ஆண்டுகளில் பணி முடிந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் பெரும்பான்மையான நீதிமன்றங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருவது வரவேற்கத்தக்கது. நீதிமன்றம் மக்களிடம் இருந்து அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை விசாரிக்கிறது. இது மக்களின் நம்பிக்கை, விழிப்புணர்வு, மரியாதை ஆகியவற்றை காட்டுகிறது.

நீதிமன்றத்தில் இருந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. நீதிபதிகள் பொதுமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான இறுதி பாதுகாவலர்கள். நீதித் துறையின் சட்ட முதுகெலும்பாக அமைந்திருக்கும் நீதிபதிகள், நீதித்துறை அமைப்பின் தூண்களாக இருக்கிறார்கள்.நீதித்துறை தொழிலில் பெண்கள் நுழைவது வரவேற்கதக்கதுடன் மகிழ்ச்சியானது. சிவில் தேர்வில் நீதிபதிகளை நியமிப்பதில் பெண்கள் 50 சதவீதம் நிரப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்