கடையின் பூட்டை உடைத்து டி.வி., மடிக்கணினிகள் திருட்டு
பெரியகுளம், தென்கரை மீன் மார்க்கெட் அருகே எலக்ட்ரானிக் கடையின் பூட்டை உடைத்து டி.வி., மடிக்கணினிகள் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரியகுளம்,
பெரியகுளம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர், தென்கரை மீன் மார்க்கெட் அருகே எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலையில் கடையை திறக்க அவர் வந்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது விற்பனைக்கு வைத்திருந்த 3 டி.வி.க்கள், 2 மடிக்கணினிகள், ரூ.6 ஆயிரம் ஆகியவை திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையை பூட்டி விட்டு பாலமுருகன் வீட்டுக்கு சென்ற பிறகு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள், ஷட்டரின் பூட்டை உடைத்து பொருட்கள், பணத்தை திருடி சென்றிருக்கின்றனர்.
இது குறித்து பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்துக்கு பாலமுருகன் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். இதுதொடர்பாக தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.