ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு 700 மாடுகள் விற்பனைக்கு வந்தன
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு 700 மாடுகள் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாட்டுச்சந்தை வாரம்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்து வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு, 200 வளர்ப்பு கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கன்றுக்குட்டி ரூ.2 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது.
இதை பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் விலை பேசி பிடித்து சென்றனர். நேற்று வழக்கமான சந்தை கூடியது. இதற்கு ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கோவை, கரூர், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து அதிக மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.
400 பசு மாடுகள், 300 எருமை மாடுகள் என மொத்தம் 700 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
இதில் எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.18 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.36 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.16 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.32 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான வியாபாரிகள் மாடுகளை விலைபேசி பிடித்து வேன் மற்றும் லாரிகளில் ஏற்றிச்சென்றனர்.