சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் தனியார் பள்ளிகள் செயல்படுகிறதா? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக கணக்கெடுத்து வருகிறார்கள்.

Update: 2019-04-25 21:45 GMT
சேலம், 

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை தவிர அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது அங்கீகாரத்தை கல்வித்துறையிடம் விண்ணப்பித்து புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக சில தனியார் பள்ளிகளை, அதன் நிர்வாகிகள் அங்கீகாரம் இன்றியும், மைதானம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இன்றியும் நடத்தி வருவதாக மாநில பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு புகார்கள் சென்றன.

அதையொட்டி, மாவட்டந்தோறும் அங்கீகாரம் இன்றி செயல்படும் நர்சரி, பிரைமரி பள்ளிகள் குறித்தும், தனியார் மேல்நிலைப்பள்ளிகள் குறித்தும், கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, சேலம் மாவட்டத்திலும் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் தனியார் பள்ளிகள் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி கூறியதாவது:-

சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த பல ஆண்டுகளாக அங்கீகாரம் இல்லாமலும், உட்கட்டமைப்பு வசதி இன்றியும் செயல்பட்ட பள்ளிகள் கண்டறியப்பட்டு பலமுறை கல்வித்துறையால் எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் ஏன், பள்ளியை மூட நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்றும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்தநிலையில், அங்கீகாரம் பெறவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் எவ்வித முயற்சியும் எடுக்காத சில தனியார் பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒன்றியம் வாரியாக அங்கீகாரம் பெறாமல் செயல்படும் தனியார் பள்ளிகள் குறித்து கணக்கெடுத்து வருகிறோம். விரைவில் அங்கீகாரம் பெறப்பட்ட பள்ளிகள் விவரத்தை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படும்.

எனவே, பெற்றோர் எக்காரணம் கொண்டும், அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து எதிர்காலத்தை வீணாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்