சேலம் அருகே வியாபாரி கொலை வழக்கில் 5 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
சேலம் அருகே வியாபாரி கொலை வழக்கில் 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அயோத்தியாப்பட்டணம்,
சேலம் வலசையூர் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 32). முறுக்கு வியாபாரி. இவர் கடந்த மாதம் அயோத்தியாப் பட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் பஸ் நிறுத்தம் அருகே அரூர் ரோட்டில் இறந்து கிடந்தார். விபத்து என கருதி காரிப்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் இரும்பு கம்பியால் அடித்து, கணேசன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, கணேசனை கொன்ற கொலையாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கணேசன் கொலை வழக்கில் சேலம் கோர்ட்டில் சின்னனூரை சேர்ந்த முத்து (27), பள்ளிப்பட்டியை சேர்ந்த பழனிசாமி (32) ஆகியோர் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், வாழப்பாடி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவர்களிடம் விசாரணை நடத்த கோர்ட்டு ஒரு நாள் அனுமதி அளித்தது. இதையடுத்து அவர்களிடம் காரிப்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காட்டூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் முறுக்கு வியாபாரி கணேசனுக்கும், சின்னனூரை சேர்ந்த முத்து தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டனர். இதனால் முத்து தரப்பினர் கணேசனை கொலை செய்ய முடிவு செய்தனர்.
சம்பவத்தன்று குடிபோதையில் சென்ற கணேசனை, வழிமறித்த முத்து தரப்பினர், அவரை இரும்பி கம்பியால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் உடலை ரோட்டில் வீசி விட்டு சென்றுள்ளனர். இந்த கொலையில் மேலும் 5 பேருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது என்று கூறினார்கள்.
விசாரணைக்கு பின்னர் முத்து, பழனிசாமி ஆகியோரை போலீசார் வாழப்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலையில் தொடர்புடைய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.