நெல்லை சந்திப்பு பஸ்நிலைய கட்டுமான பணி விரைவுபடுத்தப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை சந்திப்பு பஸ்நிலைய கட்டுமான பணி விரைவுபடுத்தப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2019-04-25 21:45 GMT
நெல்லை,

நெல்லையின் அடையாளமாகவும், நகரின் மையப்பகுதியிலும் அமைந்துள்ளது நெல்லை சந்திப்பு பெரியார் பஸ் நிலையம். இந்த பஸ் நிலையத்தை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் புதுப்பிக்க ரூ.78½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந்தேதி பழைய பஸ்நிலையத்தை இடித்து விட்டு, புதுப்பித்து கட்டும் பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

இங்கு கீழ் தளம், தரை தளம், 2 மேல் தளங்கள் என பஸ் நிலையம் அமைய உள்ளது. கீழ் தளத்தில் கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் அமைக்கப்படுகிறது. இங்கு 1,629 இருசக்கர வாகனங்களும், 106 கார்களும் நிறுத்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. தரை தளத்தில் 27 பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்படுகிறது. 30 கடைகளும் இங்கு கட்டப்படுகிறது. இங்கிருந்து மேல் தளங்களுக்கு செல்ல 4 லிப்ட்டுகளும், 2 நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்படுகிறது. மேல் தளங்களில் கடைகளும், ஏ.டி.எம். உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்து தரப்படுகிறது. மொத்தம் பஸ் நிலைய வளாகத்தில் 114 கடைகள் அமைக்கப்படுகிறது.

இந்த பஸ் நிலையத்தில் பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நடத்துவதற்காக ஆரம்பத்தில் வேகமாக தொடங்கப்பட்ட திட்டப்பணிகள், தற்போது தொய்வடைந்து கிடக்கிறது. பஸ் நிலைய வளாகத்தில் இருந்த கடைகளை காலி செய்வதில் வேகம் காட்டிய அதிகாரிகள், அதன்பிறகு பணியை ஒப்பந்த நிறுவனம் வசம் ஒப்படைத்தனர்.

ஒப்பந்த நிறுவனமும் பஸ் நிலையத்தை சுற்றி இரும்பு தகடு வேலி அமைத்து உள்ளே பள்ளம் தோண்டும் பணியை தொடங்கியது. அதன்பிறகு அவ்வப்போது ஒரேயொரு பொக்லைன் எந்திரம் மூலம் சிறிது, சிறிதாக மண் அள்ளுகிறார்கள். அந்த பணியும் பெரும்பாலான நாட்கள் நடப்பதாக தெரியவில்லை. இதனால் பணியை முடிக்க திட்டமிட்ட காலத்தை விட அதிக நாட்கள் ஆகிவிடும் என்று கருதப்படுகிறது. அதாவது இந்த பஸ் நிலையத்தை 18 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க திட்டமிடப்பட்டது. பணிகள் தொடங்கி 5 மாதங்கள் ஆகியும் கீழ் தளம் அமைப்பதற்கு உரிய பள்ளம் தோண்டும் பணியே இன்னும் முடிவடையவில்லை.

பஸ் நிலைய கட்டுமான பணியையொட்டி டவுன் பஸ் போக்குவரத்தை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. ஆனால் அது தோல்வி அடைந்து சந்திப்பு பஸ் நிலைத்தை சுற்றி உள்ள ரோடுகளே தற்காலிக பஸ் நிலையமாக மாறியது. டவுன் பஸ்கள் இந்த ரோடுகளிலேயே சென்று வருகின்றன.

இதனால் அனைத்து பஸ்கள் மற்றும் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் சந்திப்பு பஸ் நிலையத்தையே சுற்றி, சுற்றி செல்கின்றன. இந்த ரோடுகளில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடியாக உள்ளது. பயணிகள் ஒரு பஸ்சில் இருந்து இறங்கி, மற்றொரு பஸ்சை பிடிப்பதற்கு படாதபாடு படுகிறார்கள். முதியோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே பஸ் நிலைய பணிகள் எப்போது முடிவடைந்து, சந்திப்பு பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதற்கான பணியை விரைவுப்படுத்தி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது “சந்திப்பு பஸ் நிலைய பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்குரிய பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கட்டிட பணியை தொடங்கிவிட்டால் பணிகள் தொய்வில்லாமல் வேகமாக முடிக்கப்படும்“ என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்