பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு; 2 தொழிலாளிகள் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்

தூத்துக்குடியில் பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறித்த 2 தொழிலாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள், வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-04-25 22:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரின் மனைவி பால் ஜோதி (வயது 53). ராமகிருஷ்ணன் இறந்து விட்டார். நேற்று முன்தினம் பால் ஜோதி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு, தூத்துக்குடி பேட்ரிக் சர்ச் முன்பு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பால்ஜோதி கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பால்ஜோதி தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் மற்றும் போலீசார் உடனடியாக நகர் பகுதிகளில் போலீசாரை உஷார் படுத்தினர். அதன்படி சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே சற்று தொலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளை மறித்து விசாரணை நடத்திய போது, அவர்கள் பால் ஜோதியிடம் சங்கிலி பறித்த நபர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த அந்தோணி பிரைன் (20), முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (19) என்பதும் அவர்கள் கூலி தொழிலாளிகள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பவுன் சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்