குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யக்கோரி விழுப்புரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யக்கோரி விழுப்புரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-04-24 22:45 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து பானாம்பட்டு சந்திப்பு வரை சாலை விரிவாக்க பணிகள் மற்றும் கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் விரிவாக்க பணிக்காக பள்ளம் தோண்டினார்கள். அப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லக்கூடிய குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி அங்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கியது.

இதன் காரணமாக நேற்று காலை விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள பாலகிருஷ்ணன் தெரு, தாயுமானவர் தெரு பகுதிகளில் குடிநீர் வரவில்லை. இதுபற்றி நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவித்தனர். இருப்பினும் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 7.10 மணியளவில் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலைக்கு காலி குடங்களுடன் திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரிசெய்யக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும், கழிவுநீர் வாய்க்காலை உடனடியாக தூர்வார வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த மறியல் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, நகராட்சி அதிகாரிகளிடம் பேசி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதோடு, கழிவுநீர் தேங்காமல் இருக்க வாய்க்காலை தூர்வாரவும் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் காலை 7.40 மணிக்கு சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்