900 ஆண்டு பழமையான 3 நடுகற்கள் கண்டெடுப்பு

முன்னூரில் 900 ஆண்டு பழமையான 3 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Update: 2019-04-24 22:45 GMT
கரூர்,

திக்கெட்டும் புகழ் கொண்டதுதான் தமிழர்களின் வாழ்வு. அவர்கள் பண்பாட்டின் சிகரமாய் வாழ்ந்ததாக வரலாற்று சான்றுகள் பறைசாற்றுகின்றன. தஞ்சம் என்று வந்தோருக்கு அடைக்கலம் கொடுக்கும் அன்பினராய், வீரத்தின் விளை நிலமாய் வாழ்ந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊரும் ஒரு காவியத்தின் கதையாகும். இதில் புதைந்து கிடக்கும் எண்ணற்ற தகவல்கள் நெஞ்சுரம் மிக்கவை. அதில் ஒன்றுதான் கொங்கு திருநாட்டில் உள்ள கரூர்.

பல்வேறு வரலாற்று தகவல்களை சுமந்து நிற்கும் கரூர் பழந்தமிழக வரலாற்றில் வசி எனவும், கரூவூ எனவும் அழைக்கப்பட்டுள்ளது. இந்த கரூருக்கு ஏனைய நகரங்களுக்கு இல்லாத பெருமையும், வரலாற்று சிறப்பும் உண்டு. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கரூர் சிறந்த நகரமாக விளங்கியதை கரூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களில் காணப்படும் பெருங்கற்கால சின்னங்கள், சமணர் படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், நடுகற்கள், ஓலை சுவடிகள் மற்றும் மெகஸ்தனிஸ், தாலமி போன்ற வெளிநாட்டு அறிஞர்களின் குறிப்புகள் மூலம் அறியமுடிகிறது.

குன்றாக வளம் கொண்ட கொங்கு மண்டலத்தில், அமரலோக நதி என்று அழைக்கப்படும் அமராவதி நதியின் வடகரையில் அமைந்துள்ள நகரம் கரூர். வசந்த வாழ்வுக்கு வற்றாத செல்வத்தை அள்ளித்தரும் கரூரை தலைநகராக கொண்டு தான் சங்ககால சேர மன்னர்கள் ஆட்சி செய்தனர் என்பதை பதிற்றுப்பத்து, புறநானூறு, அகநானூறு போன்ற சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

சேரர்களின் பண்டைய மேற்கு கடற்கரை நகரான முசிறியிலிருந்து, பாலக்காடு, சூலூர், காங்கேயம், கரூர், உறையூர் வழியாக அன்றைய சோழர்களின் கடற்கரை நகரான காவிரிப்பூம்பட்டினத்திற்கு செல்வதற்கு கொங்கப் பெருவழி அமைந்து இருந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன.

இந்த கொங்கப்பெருவழியில் கரூருக்கு 12 கிலோ மீட்டருக்கு மேற்கே அரவக்குறிச்சி தாலுகா க.பரமத்தி அருகில் உள்ள முன்னூரில் 3 நடுகற்கள் கிடைத்துள்ளது. அந்த நடுகற்கள் 900 ஆண்டு பழமையானது. இந்த 3 நடுகற்களும் கொங்கு மண்டல மக்கள் வாழ்வியலை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. இந்த நடுகற்கள் குறித்து திருப்பூரில் இயங்கி வரும் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் ரவிக்குமார் மற்றும் பொன்னுச்சாமி, ரமேஷ்குமார், செந்தில்குமார் மற்றும் சதாசிவம் ஆகியோர் கூறியதாவது:-

பழந்தமிழ்நாட்டில் நாடு காவல் செய்து நல்லறம் பேணி நானிலம் போன்ற வாழ்ந்து மடிந்த வீரமறவர்களுக்கு வீரநடுகற்கள் எடுத்து அந்த மாவீரர் ஆன்மாவுக்கு படையல் செய்து வழிபட்டு வந்துள்ளனர். இந்த நடுகல் வழிபாடு தமிழகத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. நடுகற்களை ஓரிடத்தில் நட்டு நீர்ப்படை செய்து, உணவு படைத்து, பாடல்கள்பாடி துணங்கை கூத்தாடி வழிபடுவதன் மூலம் தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் வலிமையும், பாதுகாப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் பழந்தமிழர்கள் நடுகல்வழிபாட்டை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அந்த வகையில் முன்னூரில் கிடைத்த ஒரு நடுகல் 135 செ.மீ. உயரம், 75 செ.மீட்டர் அகலம் கொண்டதாகும். இந்த நடுகல்லில் நின்ற நிலையில் உள்ள மாவீரன் தனது வலது கையில் தன் இடுப்பில் சொருகி இருக்கும் குறுவாளை உருவியபடியும், இடது கையில் வில்லை தாங்கியபடியும், தோளில் இருபக்கமும் கேசங்கள் பறக்கும் நிலையில் போருக்கு தயாராக உள்ள நிலையில் காட்சியளிக்கிறார். இந்த வீரன் கையில் வீரக்காப்பும், கால்களில் வீரக்கழலும், இடையில் மட்டும் ஆடை அணிந்துள்ளார். மற்ற இரண்டு நடுகற்கள் ஒரே இடத்தில் கிடைத்துள்ளன. அதில் குதிரை வீரன் நடுகல் 120 செ.மீட்டர் உயரம், 60 செ.மீட்டர் அகலம் உடையது. இந்த நடுகல்லில் மாவீரன் குதிரை மேல் அமர்ந்தபடி தனது இடது கையில் குதிரையின் வேகத்தை கட்டுப்படுத்துக்கூடிய கயிற்றை பிடித்தபடியும், வலது கையில் ஓங்கிய ஈட்டியுடனும் உள்ளார். வீரனின் அள்ளி முடிந்த குடும்பி இடதுபுறம் சாய்ந்த நிலையிலும் கழுத்து மற்றும் கையில் அணிகலன்களும் அணிந்துள்ளார்.

நீண்ட காதுகளில் மகர குழைகளும், மார்பில் கண்டிகையும், இடையில் மட்டும் ஆடை கட்டும், கால்களில் தொடுதோல் அணிந்தும் மிக கம்பீரமாக காட்சி அளிக்கிறார். இந்த 3 நடுகற்களிலும் எழுத்துகள் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நெஞ்சை நிமிர்த்தி கடல் கடந்து வாள் பிடித்து போர் புரிந்து வெற்றிக்கொடி நாட்டிய தமிழன் இன்று... 

மேலும் செய்திகள்