சமூக வலைத்தளத்தில் அவதூறு பேச்சு, கலெக்டர் அலுவலகம் முன்பு துடைப்பங்களுடன் கிராம மக்கள் மறியல் - தேனியில் பரபரப்பு
சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு, 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் துடைப்பங்களுடன் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி,
கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு ஆடியோ வைரலாக பரவியது. அதில், இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் மர்ம நபர்கள் பேசி இருந்தனர். இதனை கண்டித்து ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடந்த போராட்டத்தின் போது போலீஸ் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக 1,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த 22-ந்தேதி ஆண்டிப்பட்டி அருகே உள்ள எரதிமக்காள்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில், நேற்று கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள உப்புத்துறை, ஆட்டுப்பாறை, ஆத்துக்காடு ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் தங்களது கைகளில் துடைப்பங்களை எடுத்து வந்திருந்தனர்.
சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசிய நபர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள தேனி-மதுரை சாலையில் மறியல் செய்தனர். அப்போது துடைப்பங்களை கையில் தூக்கிப் பிடித்தபடி கிராம மக்கள் கோஷங்களை எழுப்பினர். சிலர் செருப்புகளை தூக்கி காட்டினர்.
தங்கள் சமுதாயத்தை பற்றியும், தங்கள் சமுதாய பெண்களை குறித்தும் அவதூறாக பேசிய நபர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் கலெக்டர் பல்லவி பல்தேவை சந்தித்து கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில், தங்களது சமுதாயத்தை பற்றி அவதூறாக பேசிய நபர்களை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். துடைப்பங்களை ஏந்தியபடி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.