போச்சம்பள்ளி அருகே வீட்டில் பதுங்கி இருந்த கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் கைது மும்பையில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்
போச்சம்பள்ளி அருகே மும்பையில் குற்றவழக்குகளில் தொடர்புடைய கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த போது போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
மத்தூர்,
கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்தவர்கள் அணில்குமார் (வயது27), சந்திரகவுடா (30), கிரண்குமார் (30). இவர்கள் 3 பேர் மீதும் மும்பை கோளிவாலா போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்களின் செல்போன் எண்களை வைத்து மும்பை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் 3 பேரும் வேலூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர்கள் 3 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று காலை மும்பை போலீசார் அவர்கள் பதுங்கி இருந்த வீட்டை திடீரென சுற்றி வளைத்து பிடித்து 3 பேரையும் கைது செய்து அழைத்து சென்றனர். மும்பை போலீசார் 3 பேரை கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் கூறுகையில், மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது மும்பையில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள், பெங்களூருவில் வசித்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூரை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் சந்தூரில் உள்ள அவருடைய வீட்டில் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையறிந்த மும்பை போலீசார் சந்தூருக்கு வந்து அந்த வீட்டை சூழ்ந்து 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அந்த 3 பேரும் தங்கி இருந்த வீட்டு உரிமையாளரிடம் விசாரணை நடத்த கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தனர்.