சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி-மயக்கம்: ஐஸ்கிரீம் நிலையங்கள் பூட்டி ‘சீல்’ வைப்பு உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

திருவெண்காடு அருகே சிறுவர்-சிறுமிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உணவு பாதுகாப்பு துறையின் நடவடிக்கையின் பேரில் ஐஸ்கிரீம் நிலையங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2019-04-24 23:00 GMT
சீர்காழி,

நாகை மாவட்டம், திருவெண்காடு அருகே வானகிரி கிராமத்தில் உள்ள ரேணுகாதேவி கோவில் கும்பாபிஷேகம் கடந்த 22-ந் தேதி நடைபெற்றது. அங்கு விற்கப்பட்ட ஐஸ்சை விழாவிற்கு வந்து இருந்த 100-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் சிகிச்சைக்காக சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்தநிலையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நாகை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் வரலட்சுமி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் டி.சேகர், ரெங்கசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் வானகிரி பகுதியில் முகாமிட்டு ஐஸ் கிரீம் விற்பனை நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது உணவு மாதிரிகள் எடுத்து ஆய்வுக்காக தஞ்சை மற்றும் திருவாரூரில் உள்ள மைக்ரோபையாலஜி லேபுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் திருவெண்காட்டில் இருந்த ஐஸ்கிரீம் தயாரிப்பு நிலையம், மணிகிராமத்தில் இருந்த மொத்த ஐஸ்கிரீம் விற்பனை நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அந்த நிலையங்கள் அரசு அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு இருந்த 4 ஆயிரம் ஐஸ்கிரீம் கப்புகள் மற்றும் ஐஸ்கிரீம் பார்களை கைப்பற்றி அழித்தனர். மேலும் 2 நிலையங்களும் தொடர்ந்து செயல்பட தடை விதிக்கப்பட்டு மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு துறையினர் தொடர்ந்து இப்பகுதியை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்