போளூர் அருகே வீடு புகுந்து நர்சிங் மாணவி கடத்தல் 2 பேர் கைது
போளூர் அருகே வீடு புகுந்து நர்சிங் மாணவியை கடத்தி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போளூர்,
போளூரை அடுத்த பெரணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் அய்யப்பன் (வயது 30). அதே ஊரில் சிக்கன் கடை வைத்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணமானவர். இவர் அதே பகுதியை சேர்ந்த சென்னையில் நர்சிங் படிக்கும் 20 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த அய்யப்பனின் மனைவி பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க மாணவி ஊருக்கு வந்திருந்தார்.
தேர்தலுக்கு மறுநாள் இரவு 7 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அய்யப்பன் சென்னையை சேர்ந்த தனது நண்பரும், வாடகை கார் டிரைவருமான சரவணன் (25) என்பவருடன் அங்கு சென்றார். அந்த மாணவியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி மாணவியை காரில் கடத்திச் சென்றார்.
இதைப்பார்த்த மாணவியின் உறவினர்கள் சினிமா பாணியில் காரை துரத்தி சென்றனர். ஆத்துரை கிராமம் அருகே விவசாய நிலத்தில் கார் சென்றபோது சேற்றில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து இருவரும் மாணவியை விட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை போளூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து அய்யப்பன் மற்றும் சரவணன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.