பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் கார்கள் அறிமுகம்
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் நீளமான சக்கர பகுதிகளை கொண்ட புதிய ரக மாடலை அறிமுகம் செய்துள்ளது
சொகுசு கார்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் நீளமான சக்கர பகுதிகளைக் கொண்ட புதிய ரக மாடலை அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் கண்காட்சியில் இது காட்சிப்படுத்தப்பட்டது. சமீபத்தில் இந்நிறுவனம் 3 சீரிஸ் வரிசையில் 7-வது தலைமுறை கார்களை அறிமுகப்படுத்தியது. அவற்றில் சீன சந்தையைக் குறிவைத்து தற்போது இப்புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் சக்கரங்கள் வழக்கமான அளவை விட 41 மி.மீ. அதிகமாகும். அதாவது சக்கரங்கள் 2,851 மி.மீ. சுற்றளவு கொண்டது. இந்தக் காரின் நீளம் 4,719 மி.மீ., அகலம் 1,827 மி.மீ., உயரம் 1,459 மி.மீ. ஆகும். இதில் நான்கு சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உள்ளது. இதன் நீளம் அதிகமாக உள்ளதால் முன் சீட்டுக்கும் பின் சீட்டுக்கும் இடையில் அதிக இடைவெளி தரப்பட்டுள்ளது. இதனால் சவுகரியமாக பயணிக்க முடியும். வான் அழகை ரசிக்க கண்ணாடியால் ஆன மேற்கூரை உள்ளது. இந்த கார் சீனாவின் லயோனிங் மாகாணம் ஷென்யாங்கில் உள்ள டியெக்ஸி ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு மாடல்கள் வந்துள்ளன. ஒன்று ஸ்டாண்டர்டு வகையாகும். மற்றொன்று நீளமான பிரிவைச் சேர்ந்தது.
இதில் பி.எம்.டபிள்யூ.வின் பர்சனல் அசிஸ்டென்ட் சிஸ்டம் உள்ளது. இதில் பல டிஜிட்டல் சேவைகள் உள்ளன. குரல் வழி கட்டுப்பாட்டு வசதியும் இதில் உள்ளது. இந்தியாவைப் பொருத்தமட்டில் சமீபத்தில்தான் பி.எம்.டபிள்யூ. 6 சீரிஸ் கிரான்ட் டுரிஸ்மோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்புதிய மாடல் ஓரிரு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 16-ம் தேதி இந்நிறுவனம் பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 5 மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்தே 3 சீரிஸ் மாடல் அறிமுகம் இருக்கும் என்று தெரிகிறது.