பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தகராறு, தாய்-மகள் தீக்குளிப்பு - சிகிச்சை பலனின்றி தாய் சாவு
பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ஏற்பட்ட தகராறில் தாய்- மகள் தீக்குளித்தனர். இதில் தாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
செந்துறை,
நத்தம் தாலுகா செந்துறை அருகேயுள்ள சிறுகுடி இந்திராநகரை சேர்ந்தவர் ரவி. இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரோசி (வயது 42). இவர்களின் மகள் பிரினிதா (17). பிரினிதா ஒரு பள்ளிக் கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது.
அதில் பிரினிதா எதிர்பார்த்த அளவு மதிப்பெண் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தாய்-மகள் இருவருக்கும் மிகுந்த மனவருத்தத்தை அளித்தது. இதற்கிடையே நேற்று 2 பேருக்கும் இடையே பிளஸ்-2 மதிப்பெண் குறித்த பேச்சு எழுந்தது. ஒருகட்டத்தில் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
அப்போது விரக்தி அடைந்த ரோசி, வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றினார். அதை பார்த்த பிரினிதா கேனை பறித்து அதில் மீதம் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றினார். அதற்குள் ரோசி தனது உடலில் தீவைத்து கொண்டார். தன்னால் தாய் தீக்குளித்ததை பார்த்த மகளும் தனது உடலில் தீ வைத்து கொண்டார்.
இதனால் 2 பேரும் உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் வேதனையால் சத்தம் போட்டனர். அதை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து 2 பேரையும் மீட்டனர். எனினும், 2 பேருக்கும் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டனர்.
அதில் தாய் ரோசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பிரினிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்தது தொடர்பாக எழுந்த தகராறில் தாய்-மகள் தீக்குளித்து அதில் தாய் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.