பெருங்குடி - வேளச்சேரி இடையே சிக்னல் கோளாறு: பறக்கும் ரெயில் பாதையில் இரவு நேரத்தில் போக்குவரத்து பாதிப்பு

பறக்கும் ரெயில் பாதையில் பெருங்குடி - வேளச்சேரி இடையே நேற்று இரவு சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் இருட்டில் தண்டவாளத்தில் இறங்கி நடந்தே சென்றனர்.

Update: 2019-04-23 23:15 GMT
சென்னை,

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் பாதையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்றதால் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில், இரவு 8 மணியளவில் பெருங்குடி - வேளச்சேரி இடையே சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், கடற்கரையில் இருந்து வேளச்சேரி சென்ற ரெயில்கள் பெருங்குடியில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக நடுவழியில் நிறுத்தப்பட்டன.

தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எந்தவித அறிவிப்பும் இன்றி ரெயில்கள் நின்றதால், பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பயணிகள் எரிச்சல் அடைந்தனர். ரெயில் இப்போது கிளம்பிவிடும்.. இன்னும் சற்று நேரத்தில் கிளம்பிவிடும்... என்று எதிர்பார்த்த பயணிகளுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியது.

ரெயில் போக்குவரத்து பாதிப்பு

இதனால், பொறுமை இழந்த பயணிகள் இருட்டில் தண்டவாளத்தில் இறங்கி செல்போனில் உள்ள சிறிய விளக்கை எரியவிட்டபடி, அதன் வெளிச்சத்தில் நடக்கத் தொடங்கினார்கள். 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து வந்து வேளச்சேரி ரெயில் நிலையத்தை அடைந்தனர். கடற்கரை - வேளச்சேரி இடையே ரெயில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டதால், வேளச்சேரியில் இருந்தும் கடற்கரை நோக்கி ரெயில் புறப்பட முடியாத நிலை ஏற்பட்டது.

ஏனென்றால், கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு ரெயில் சென்றால் தான், பிறகு அந்த ரெயில் மீண்டும் கடற்கரை நோக்கி திருப்பிவிடப்படும். ஆனால், அந்த ரெயில்களே ஆங்காங்கே நடுவழியில் நின்றதால், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு இயக்க ரெயில்கள் இல்லை. இதனால், இரு மார்க்கத்திலும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று இரவு 9.15 மணி வரை சிக்னல் கோளாறு சரிசெய்யப்படவில்லை. இதனால், வழக்கமாக ரெயிலில் செல்லும் பயணிகள் அவதிப்பட்டதுடன், கிரிக்கெட் ரசிகர்களும் நேற்று அவதியடைந்தனர்.

மேலும் செய்திகள்