தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை

கமுதி கிராம மக்கள் சாலை மறியல்- முற்றுகையில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-23 22:15 GMT
கமுதி,

பொன்னமராவதி சம்பவத்தில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியர்வர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அபிராமம், கமுதி உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் கிராமமக்கள் ஈடுபட்டனர்.

அப்போது வலைய மணக்குளம், காக்குடி உள்பட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கமுதி தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதேபோல அபிராமம் அருகே வழிமறிச்சான், மாங்குடி, விலக்குசாலை உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தை சேர்ந்த 100 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக சுமார் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம், பரமக்குடி சங்கர், அபிராமம் இன்ஸ்பெக்டர் நாகராணி மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் அவதூறு பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்