காஞ்சீபுரத்தில் வாலிபரை கத்தியால் குத்திய வழக்கில் 3 பேர் கைது 2 மோட்டார் சைக்கிள்கள், 4 கத்திகள் பறிமுதல்

காஞ்சீபுரத்தில் வாலிபரை கத்தியால் குத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-04-23 22:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மடம் தெருவை சேர்ந்தவர் தேவா (வயது 25). இவர் காஞ்சீபுரம் தாயாரம்மன் கோவில் அருகே ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு மர்ம கும்பல் வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டது. தேவா சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.

கைது

இந்த நிலையில் நேற்று காலை செவிலிமேடு ஜங்சனில், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 3 பேர், வேகமாக வந்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

விசாரணையில், தேவாவுக்கும், இவர்களுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததும், அதில் அவர்கள் தேவாவை கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. அவர்கள் காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் மண்டபம் தெருவை சேர்ந்த சதீஷ் (30), பிள்ளையார்பாளையம் நேரு நகரை சேர்ந்த துரைபாபு (25), காஞ்சீபுரம் அடுத்த கோளிவாக்கம் பகுதியை சேர்ந்த புல்லட் பாரதி (25) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

இவர்களில் சதீஷ் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார். மற்றவர்கள் அடிதடி வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 3 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்கள் உடனடியாக போலீஸ் பாதுகாப்புடன் காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்