கூட்டுப்பண்ணைய திட்டத்தில் வேளாண் எந்திரங்களை குறைந்த கட்டணத்தில் பெற்று கோடை உழவு செய்யலாம் இணை இயக்குனர் தகவல்
கூட்டுப்பண்ணைய திட்டத்தின்கீழ் வேளாண் எந்திரங்களை குறைந்த கட்டணத்தில் பெற்று கோடை உழவு செய்து பயன் அடையலாம் என்று சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் கூட்டுப்பண்ணைய திட்டம் மூலம் 2017–18ம் ஆண்டில் 20 டிராக்டர்களும், 2018–19ம் ஆண்டு 23 டிராக்டர்களும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த டிராக்டர்களை அந்தந்த பகுதியில் உள்ள உழவர் விவசாய குழுவைச் சேர்ந்த விவசாயிகள் குறைந்த வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனவே உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகள் அனைவரும் தங்கள் குழுவிற்கு வழங்கப்பட்ட டிராக்டர்களை பயன்படுத்தி கோடை உழவு மேற்கொண்டு பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொதுவாக, கோடை உழவு செய்வதால் பெருமளவில் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், கோடை உழவு செய்யப்படாத வயல்களில் மேல் மண் அரிமானம் ஏற்படுவதோடு மண்ணிலுள்ள ஊட்டங்களும் விரையமாகும். கோடை உழவு செய்வதன் மூலம் மண் அரிப்பு தடுக்கப்பட்டு வயல்களிலேயே மழைநீர் சேகரிக்கப்படுகிறது. இதனால் நிலப்பரப்பின் கீழ் ஈரப்பதத்தை காத்து பூச்சிகள் மற்றும் பூஞ்சான்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் கோடை உழவு செய்வதால் முன் பருவ விதைப்புக்கு ஏதுவாகிறது. ஏற்கனவே உழுத வயலில் மறு உழவு செய்து விதைப்பது சுலபம் ஆவதோடு அடி மண் இறுக்கம் நீங்கி நீர் கொள்திறன் கூடுவதோடு விளைச்சலும் அதிகரிப்பதாக ஆய்வில் அறியப்பட்டுள்ளது. கோடையில் உழுவதால் மண்ணிற்கு அடியில் காணப்படும் கூட்டுப்புழுக்கள் மேற்பரப்பில் தள்ளப்பட்டு பறவைகளுக்கு இரையாக்கப்படுகிறது.
வெயிலிலும் புழுக்கள் கொல்லப்படுகிறது. இதனால் பூச்சி தாக்குதல் குறைக்கப்படுகிறது. மேலும் களைகளின் வேர்ப்பகுதி களையப்பட்டு முளைப்புத்திறன் வெகுவாக குறைக்கப்படுகிறது. மண் வளத்தை அதிகரிக்கும். நைட்ரஜனை நிலைப்படுத்தும் பயிர்களை பயிரிடுதல் அடுத்த சாகுபடிக்கான உரத்தேவையைக் குறைக்கும். மழை நீரை நிலத்தில் தக்க வைக்கும்.
இவ்வாறு வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.