2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவிலும் இப்படி நடந்தது இலங்கை குண்டு வெடிப்பை சுட்டிக்காட்டி மோடி தேர்தல் பிரசாரம்

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பை சுட்டிக் காட்டி பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் காங்கிரசை கடுமையாக தாக்கினார்.

Update: 2019-04-22 23:12 GMT
மும்பை,

இலங்கையில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிரிழந்தனர்.

இந்த பயங்கர சம்பவம் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த விவகாரத்தை வைத்து நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நாசிக் மாவட்டம் திந்தோரி நகரில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி பேசும்போது, ‘இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுடைய தெய்வத்தை வழிபட்டபோது கொல்லப்பட்டு இருக்கின்றனர். இதேபோன்ற சூழ்நிலைதான் இந்தியாவில் 2014-க்கு முன்னர் இருந்தது. தேசத்தில் எங்கோ ஒரு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட வண்ணம் இருந்தது’ என காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட பதிலடி விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை விமர்சனம் செய்த பிரதமர் மோடி, அவர்கள் வடிப்பது எல்லாம் போலி கண்ணீர் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘காங்கிரசுக்கும், தேசியவாத காங்கிரசுக்கும் இரங்கல் கூட்டங்கள் நடத்தவும் பாகிஸ்தான் பற்றி பேசி உலகம் முழுவதும் சென்று அழவும் மட்டும்தான் தெரியும். ஆனால் இப்போதைய காவலாளி பாகிஸ்தானுக்குள் சென்றே தாக்குதலை நடத்தி உள்ளார். அதன் பலனாக பயங்கரவாதம் கா‌‌ஷ்மீரில் சில மாவட்டங்களுக்குள் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. மீதம் இருக்கும் பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினரால் வேட்டையாடும் காலம் வெகுதொலைவில் இல்லை’’ என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்