30 அடி உயர மெட்ரோ ரெயில் பாலத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் திருவொற்றியூரில் பரபரப்பு
திருவொற்றியூரில், மது வாங்கி தரும்படி கேட்டு 30 அடி உயர மெட்ரோ ரெயில் பாலத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் தியாகராயபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 48). கூலித்தொழிலாளியான இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
நேற்று மதியம் 1.30 மணியளவில் திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 30 அடி உயர மெட்ரோ ரெயில் மேம்பாலத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு தனக்கு குடிக்க மது வாங்கி தரவேண்டும். இல்லை என்றால் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று கால்களை கீழே தொங்க விட்டபடி மிரட்டல் விடுத்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவொற்றியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார், தற்கொலை மிரட்டல் விடுத்த செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செல்வம், தனக்கு மது வாங்கி கொடுத்தால்தான் கீழே இறங்கி வருவேன் என்றார்.
உடனே போலீசார், கீழே இறங்கி வந்தால் மது வாங்கி தருவதாக கூறினர். ஆனால் மது பாட்டிலை வாங்கி மேலே வந்து தன்னிடம் கொடுத்தால்தான் கீழே இறங்குவேன் என்று கூறி கீழே இறங்கி வர செல்வம் மறுத்தார்.
தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு வந்த திருவொற்றியூர் தீயணைப்பு படை வீரர்கள், செல்வத்துக்கு தெரியாமல் நைசாக மெட்ரோ ரெயில் மேம்பாலத்தில் ஏறி பின்புறமாக சென்று செல்வத்தை லாவகமாக மீட்டனர்.
பின்னர் அவரை மேம்பாலத்தில் இருந்து கீழே இறக்கினர். செல்வத்தை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்த போலீசார், அவரை எச்சரித்து அவரது உறவினருடன் அனுப்பி வைத்தனர். இதனால் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.