சென்டிரல் ரெயில் நிலையத்தில் 260 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கைது
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் 260 கிலோ செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை,
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ரெயில்வே பாதுகாப்புபடை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரெயில் நிலைய பார்சல் அலுவலகத்தில் சந்தேகத்துக்கிடமாக ஒருவர் நிற்பதை போலீசார் கவனித்தனர். போலீசார் அந்த நபரை விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபர் கொண்டு வந்த பார்சலை சோதனை செய்தனர். அப்போது அதில் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து அந்த நபரிடம் நடத்திய தொடர் விசாரணையில் அவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் சிங் (வயது 43) என்பதும், சென்னையில் இருந்து டெல்லிக்கு ரெயில் மூலம் செம்மரக்கட்டைகளை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 260 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து, நேற்று காலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மகேஷ் சிங்கை கைது செய்தனர்.