இலங்கை சம்பவம் எதிரொலி: கிறிஸ்தவ தேவாலயங்களில் வெடிகுண்டு சோதனை
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து புதுவையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் போலீசார் நேற்று வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
புதுச்சேரி,
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நேற்று ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர். இந்த நிலையில் இலங்கையில் நடந்த ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது 3 தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 215 பேர் பலியாயினர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து புதுவையிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
புதுவை மாநில போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் நேற்று மாலை புதுவை ரெயில்நிலையம் எதிரே உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தினர். மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் ஆலய வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
பின்னர் போலீசார் அங்கிருந்து மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா ஆலயத்துக்கு சென்றனர். அங்கும் கோவில் வளாகம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர்.
பின்னர் போலீசார் அங்கு இருந்தவர்களிடம், ‘தேவாலய வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும்படி யாராவது சுற்றி திரிந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்படி கூறினர். மேலும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மர்ம பொருட்கள் ஏதாவது கிடந்தால் அதனை யாரும் அப்புறப்படுத்த வேண்டாம். உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவியுங்கள்’ என்று கூறினர். பின்னர் போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதே போல் புதுவையில் உள்ள மேலும் பல தேவாலயங்களில் போலீசார் நேற்று வெடிகுண்டு சோதனை நடத்தினர்.