ஈரோட்டில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை ரோட்டில் பள்ளங்கள் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு

ஈரோட்டில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழையால் ரோட்டில் பள்ளங்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-04-21 22:00 GMT
ஈரோடு, 

ஈரோட்டில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. வெயிலின் காரணமாக வாகன ஓட்டிகள், குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் அவதி அடைந்து வந்தனர்.

இதனால் பொதுமக்கள் மழை வேண்டி வருண பகவானை தினமும் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 1.30 மணிக்கு வருண பகவானின் கருணையால் ஈரோட்டில் மழை பெய்யத்தொடங்கியது. அதன் பின்னர் இடி-மின்னலுடன் சிறிது நேரத்திலேயே வலுப்பெற்று கன மழையாக பெய்தது.

மழை பெய்யத்தொடங்கியதும் ஈரோடு மாநகர் பகுதியில் மின்சாரம் தடைபட்டது. நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கிய இந்த மழை இரவு 2.45 மணி வரை கொட்டி நீடித்தது. அதைத்தொடர்ந்தும் அதிகாலை 4.30 மணி வரை சாரல் மழை பெய்தது.

ஈரோடு மாநகர் பகுதியில் முனிசிபல் காலனி, பெரியவலசு, ஆர்.கே.வி.ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்ததால் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சாக்கடை கழிவுநீருடன், மழைநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

மழைநீர் வடிந்ததும் பிளாஸ்டிக் கழிவுகள் ரோடுகளில் குவிந்து கிடந்தது. மேலும் ஒருசில இடங்களில் ரோடுகள் சேறும், சகதியுமாகவும் காட்சி அளித்தது. இதனால் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை அதை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் தங்களது வீடுகளின் முன்பு கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தினார்கள்.

நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஈரோடு கந்தசாமி செட்டி வீதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை சரிந்து ரோட்டில் விழுந்தது. நள்ளிரவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.

மேலும் ஈரோடு காந்திஜி ரோட்டில் மழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் ரோட்டின் நடுவில் இரும்பு தடுப்பு கம்பிகளை வைத்து இருந்தனர்.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் நேற்று காந்திஜி ரோட்டில் சென்றனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறும்போது, ‘ஈரோடு காந்திஜி ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணி, உயர் மின் அழுத்த கம்பிகள் பதிக்கும் பணி, ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் திட்ட பணி உள்ளிட்ட பணிகளுக்காக ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டது.

மேற்கண்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்ததும் தார்ரோடு போடப்பட்டது. சரியாக அழுத்தம் கொடுக்காமல் தார்ரோடு போடப்பட்டதன் காரணமாக அன்று இரவே ரோட்டின் நடுவில் ஒரு இடத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த பள்ளம் சரிசெய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக காந்திஜி ரோட்டின் நடுவில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. வாகன ஓட்டிகள் இந்த பள்ளத்தில் விழுந்துவிட அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. எனவே காந்திஜி ரோட்டில் சரியான அழுத்தம் கொடுத்து புதிதாக தார்ரோடு போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதேபோல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழையும், பலத்த மழையும் பெய்தது. பவானி பகுதியில் நேற்று முன்தினம் வீசிய சூறாவளிக்காற்றில் தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சத்தியமங்கலம் -68, பவானி -49.4, கொடிவேரி -49.4, ஈரோடு -45, மொடக்குறிச்சி -37, பவானிசாகர் -35.2, அம்மாபேட்டை -34, குண்டேரிபள்ளம் -28, கொடுமுடி -22, கோபி -18, நம்பியூர் -14, கவுந்தப்பாடி -13, வரட்டுப்பள்ளம் -13, பெருந்துறை -12, தாளவாடி -10, சென்னிமலை -5, எலந்தகுட்டைமேடு -5.

அதிக பட்சமாக சத்தியமங்கலத்தில் 68 மில்லி மீட்டர் மழை அளவும், குறைந்த பட்சமாக சென்னிமலை மற்றும் எலந்தகுட்டைமேடு பகுதியில் தலா 5 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்