தூத்துக்குடியில் வேன் டிரைவர் கொலை வழக்கில் 2 பேர் கைது பரபரப்பு தகவல்
தூத்துக்குடியில் வேன் டிரைவரை கொலை செய்த 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் வேன் டிரைவரை கொலை செய்த 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
வேன் டிரைவர்
தூத்துக்குடி பக்கிள்புரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரதுமகன் மோகன்(வயது 32). வேன் டிரைவர். மோகனுக்கு பாக்கியம் என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர், தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மனைவி, குழந்தைகளுடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இவர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2011-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராவதற்காக கடந்த 9-ந்தேதி தூத்துக்குடி வந்தார். அவர் தூத்துக்குடி பக்கிள்புரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த 2நாட்களுக்கு முன்பு அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரை கொலை செய்ததாக போல்டன்புரத்தை சேர்ந்த முருகன் மகன் ஜெலஸ்டின்குமார்(32), ஆறுமுகம் மகன் ராஜூ(32) ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தகராறு
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோகன் போல்டன்புரத்தில் உள்ள ஒரு பகுதியில் வைத்து மது குடித்தார். அங்கு ஏற்கனவே போல்டன்புரத்தை சேர்ந்த முருகன் மகன் ஜெலஸ்டின்குமார், ஆறுமுகம் மகன் ராஜூ ஆகியோர் மது குடித்து கொண்டு இருந்தனர். அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஜெலஸ்டின்குமார், ராஜூ ஆகியோர் மோகனை அடித்து விரட்டி விட்டனர். இதனால் வீட்டுக்கு சென்று மோகன், ஒரு இரும்பு கம்பியை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது ஜெலஸ்டின்குமார் உறவினரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தபடி சென்றார்.
இதைத் தொடர்ந்து ஜெலஸ்டின்குமார், ராஜூ ஆகியோர் பக்கிள்புரம் பகுதிக்கு சென்றனர். அங்கு வந்த மோகனை மடக்கி பிடித்து கம்பியால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். தலைமறைவாக இருந்த ஜெலஸ்டின் குமார், ராஜூ ஆகிய 2 பேரும் நேற்று கைது செய்யப்பட்டதாக, அவர் தெரிவித்தார்.
கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கோர்ட்டு உத்தரவுப்படி அந்த 2 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.