வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்: டிப்ளமோ என்ஜினீயர் உள்பட 2 பேர் சாவு குலசேகரன்பட்டினம் அருகே பரிதாபம்

குலசேகரன்பட்டினம் அருகே வேன், மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-04-21 22:30 GMT
குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் அருகே வேன், மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்செந்தூர் கோவிலுக்கு...

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா வடக்கன்குளம் அருகே உள்ள கோலியான்குளத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகன் நவநீதகிருஷ்ணன். இவரின் குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக நேற்று காலையில் குடும்பத்துடன் வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர். வேனில் 12 பேர் இருந்தனர்.

வேனை ஆரல்வாய்மொழியை சேர்ந்த முத்து மகன் சந்தானகிருஷ்ணன் ஓட்டினார். வேன் குலசேகரன்பட்டினம் அருகே கடற்கரை சாலையில் சென்று கொண்டு இருந்தது. தீதத்தாபுரம் விலக்கு அருகே சென்றபோது, எதிரே பெரியதாழையை சேர்ந்த ராஜ் மகன் பாலன் (வயது 19), அதே ஊரை சேர்ந்த தனது நண்பரான டக்லஸ் மகன் டிசான் (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

2 பேர் சாவு

அப்போது கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளும், வேனும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டது. அதே நேரத்தில் வேனும் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாலனின் நண்பர் டிசான், வேனில் வந்த நவநீதகிருஷ்ணனின் தந்தை இசக்கிமுத்து (53), தாய் வள்ளியம்மாள் (55), உறவினர்கள் கோலியான்குளத்தை சேர்ந்த முருகன் (53), நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த முருகன் (59), மனைவி நாகம்மாள் (57), உச்சிமகாளி மனைவி பாப்பா (45), கன்னியாகுமரியை சேர்ந்த ஹரிகரன் (20) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களில் 7 பேர் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். டிசான் திருச்செந்தூரில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர், மாலையில் பரிதாபமாக இறந்து போனார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார், விபத்தில் உயிரிழந்த பாலனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான பாலன் நாசரேத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். டிசான் கப்பல் வேலைக்கான 6 மாத பயிற்சி முடித்து இருந்தார். வேலைக்காக காத்திருந்த நிலையில் விபத்தில் பரிதாபமாக பலியாகிவிட்டார்.

மேலும் செய்திகள்