டி.பி. சத்திரத்தில் கஞ்சா விற்பனை கும்பல் கைது வீடு, வீடாக சென்று போலீசார் அதிரடி சோதனை
சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை கும்பல் சிக்கியது.
சென்னை,
சென்னை டி.பி.சத்திரம் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக டி.பி.சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், விநாயகம் ஆகியோர் தலைமையில் கீழ்ப்பாக்கம் மற்றும் டி.பி.சத்திரம் போலீசார் இணைந்து நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டார்.
அப்போது ஒரு மொட்டைமாடியில் 9 பேர் கொண்ட கும்பல் கஞ்சாவை சிறிய பொட்டலங்களில் அடைத்துக்கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை கையும், களவுமாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீபன் என்கிற குணசேகரன்(வயது 26), கருப்பு என்கிற ஞானசேகரன்(24), தமிழரசன்(19), செந்தில்குமார்(24), வினோத்குமார்(27), சரவணன்(31), வினோத்(27) மற்றும் புளியந்தோப்பு ராஜத்தோட்டம் 1-வது தெருவை சேர்ந்த கீர்த்திவாசன்(21), கிரே நகரை சேர்ந்த சரத்குமார்(21) என்பது தெரிய வந்தது.
கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா வினியோகத்தில் இந்த கும்பல் ஈடுபட்டிருந்த அதிர்ச்சி தகவலும் கிடைத்தது. இதையடுத்து கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்களும் போலீசார் கையில் சிக்கியது.
டி.பி.சத்திரம் குடியிருப்பில் பல வீடுகளில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பிடிபட்ட கஞ்சா கும்பலை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நேற்று டி.பி.சத்திரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் கஞ்சா சோதனை வேட்டையில் ஈடுபட்டனர்.
வீடு, வீடாக சென்று கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா? என்று தீவிரமாக அலசி ஆராய்ந்தனர். பீரோ, கட்டில், அலமாரி, துணிமணிகள் என ஒவ்வொரு இடத்தையும் போலீசார் சோதனை செய்தனர். ஆனால், இந்த சோதனையில் கஞ்சா எதுவும் போலீசாரிடம் சிக்கவில்லை.
போலீசார் நடவடிக்கை குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘சோதனை என்ற பெயரில் வீட்டை அலங்கோலமாக்கிவிட்டனர்.’ என்று ஆதங்கம் தெரிவித்தனர்.