கம்மாபுரம் அருகே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கம்மாபுரம் அருகே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-20 22:45 GMT
கம்மாபுரம், 

கம்மாபுரம் அடுத்த கோ.ஆதனூரில் விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலையில் சிறிய வாய்க்கால் பாலம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் ஒரு புறம் மட்டும் பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்தது. மறுபுறம் பாலம் அமைப்பதற்காக பள்ளம் மட்டும் தோண்டப்பட்டு, பணிகள் நடைபெறவில்லை என தெரிகிறது. இதனால் அவ்வழியாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அதில் பள்ளம் இருப்பதற்கான எந்த ஒரு அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை திடீரென விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கம்மாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தை சுற்றி இரும்பிலான தடுப்பு கட்டை வைத்தனர். மேலும் பாலம் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் விருத்தாசலம்- பரங்கிப்பேட்டை சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்