கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் சுவேதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 பெண்களிடம் நகை பறிப்பு சிக்னலுக்காக நின்ற போது மர்ம ஆசாமிகள் கைவரிசை
கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் சுவேதா எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னலுக்காக நின்ற போது 3 பெண்களிடம் மர்ம ஆசாமிகள் நகை பறித்து சென்றனர்.
கோவை,
சென்னையில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு சுவேதா எக்ஸ்பிரஸ் என்ற சிறப்பு ரெயில் நேற்று முன்தினம் இயக்கப்பட்டது. இந்த ரெயில் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து எர்ணாகுளத்துக்கு புறப்பட்டது. ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். ரெயில் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் ஈரோடு ரெயில் நிலையம் அருகே சிக்னலுக்காக காத்து இருந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.
அப்போது எஸ்.11 என்ற எண் கொண்ட பெட்டியில் சில மர்ம ஆசாமிகள் ஏறினர். அவர்கள் ரெயிலில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த சென்னையை சேர்ந்த கார்த்தி என்பவரின் மகள் சுவாதி (வயது 22) கழுத்தில் அணிந்து இருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.
இதையடுத்து சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பாதுஷா என்பவரின் மனைவி காதிபீவி (41) என்பவர் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலி, கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த பாபு என்பவரின் மனைவி மினிபாபு (43) கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள் கூச்சல் போட்டனர். உடனே சில பயணிகள் திருடன்... திருடன்... என்று கத்தினர். ஆனால் அந்த மர்ம ஆசாமிகள் கண் இமைக்கும் நேரத்தில் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டனர். 3 பெண்களிடம் இருந்தும் மொத்தம் 8 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.
இதையடுத்து அந்த ரெயில் கோவை ரெயில்நிலையம் வந்தடைந்தது. இதனால் நகையை பறிகொடுத்த வர்கள் கோவை ரெயில்வே போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பணிக்கு போலீசார் சென்றதால் இந்த ரெயிலில் குறைந்த அளவிலான போலீசாரே பாதுகாப்பு பணியில் இருந்தனர். இதை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் 3 பெண்களிடம் நகையை பறித்து சென்றது தெரிவந்து உள்ளது. மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா உள்ளதா?, ரெயிலில் பயணிகள் போல் நடித்து யாராவது கைவரிசை காட்டினார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.