டாப்சிலிப்பில் குவிந்த சுற்றுலா பயணிகள் யானை சவாரி செய்து மகிழ்ந்தனர்
ஆனைமலையை அடுத்த டாப்சிலிப்பில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் யானை சவாரி செய்து மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனைமலை,
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்டு பொள்ளாச்சி, டாப்சிலிப் (உலாந்தி), வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய 4 வனச்சரகங்கள் உள்ளன. இதில் பொள்ளாச்சி வனச்சரகத்துக்குட்பட்ட ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவி, டாப்சிலிப் வனச்சரகம் மற்றும் வால்பாறை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இதில் டாப்சிலிப்பிற்கு வரும் சுற்றுலா பயணிகள் யானை சவாரி மூலம் வனத்தின் பசுமையையும், வன விலங்குகளையும் கண்டுகளிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் அங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான விடுதிகளில் தங்கி இயற்கையை ரசித்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்கென டாப்சிலிப்பில் வனத்துறை சார்பில் தங்கும் விடுதிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தங்குவதற்கு ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். தற்போது கோடை சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் டாப்சிலிப்பில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
டாப்சிலிப் வரும் சுற்றுலா பயணிகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று வனத்தின் அழகை கண்டு ரசிக்க யானை சவாரி மூலம் அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்கென கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் வளர்க்கப்பட்டு வரும் யானைகளில் நாள்தோறும் 2 யானைகள் என்று சுழற்சி முறையில் யானை சவாரியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
கடந்த பிப்ரவரி மாதத்தில் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது. இதன் காரணமாக 48 நாட்கள் யானை சவாரி ரத்து செய்யப்பட்டிருந்தது. புத்துணர்வு முகாம் கடந்த 10-ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில் 13-ந் தேதி முதல் யானை சவாரி தொடங்கப்பட்டது. தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் டாப்சிலிப்பிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. டாப்சிலிப்புக்கு வரும் பலரும் யானை சவாரி செய்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து டாப்சிலிப் வனச்சரகர் நவீன்குமார் கூறியதாவது:-
மழை காலங்களில் மண்ணில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி யானை சவாரி ரத்து செய்யப்படும். அதேபோல் ஆண்டுக்கு ஒரு முறை புத்துணர்வு முகாம் நடத்தும்போதும் யானை சவாரி ரத்து செய்யப்படும். தற்போது புத்துணர்வு முகாம் முடிந்து மீண்டும் யானை சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் யானை சவாரி செய்து வருகின்றனர். தற்போது கோடை சீசன் தொடங்கியதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.