கிணற்றில் கயிறு அறுந்து 5 பேர் பலி: பள்ளி தாளாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு
கிணற்றில் கயிறு அறுந்து 5 பேர் பலியான சம்பவத்தில் பள்ளி தாளாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கலசபாக்கம்,
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே காஞ்சியை அடுத்த ஆலத்தூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் காஞ்சியை அடுத்த தாமரைபாக்கத்தை சேர்ந்த பிச்சாண்டி (வயது 51), ரவி (49), தணிகாசலம் (50), ஜெயமுருகன் (25), அல்லியந்தல் பகுதியை சேர்ந்த வேலு (35), பெரியகிலாம்பாடியை சேர்ந்த மாணிக்கம் (49) ஆகிய 6 பேர் ஈடுபட்டனர்.
இவர்கள் 6 பேரும் கிரேன் எந்திரத்தின் இரும்பு கயிறு மூலம் மரப்பெட்டியில் கிணற்றில் இறங்கினர். கிணற்றில் வெடி வைத்து விட்டு மீண்டும் அவர்கள் வெளியில் வரும் போது கிரேன் கயிறு அறுந்து விழுந்தது. இதனால் மரப்பெட்டியில் இருந்த 6 பேரும் கிணற்றில் விழுந்தனர்.
இதில் பிச்சாண்டி, ரவி, தணிகாசலம், ஜெயமுருகன், வேலு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாணிக்கம் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் உயிரிழந்த 5 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையில் கிணற்றில் விழுந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி, முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மாணிக்கம் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் தனியார் பள்ளி தாளாளர் பருவதம், பள்ளி மேலாளர், கிரேன் ஆபரேட்டர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.