தேனியில் இருந்து திருப்பூர், கோவைக்கு செல்ல பஸ்கள் இயங்காததால் பயணிகள் போராட்டம்

தேனியில் இருந்து திருப்பூர், கோவை பகுதிகளுக்கு செல்வதற்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் பஸ்கள் இயங்காததால் பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-19 23:00 GMT
தேனி,

தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் சொந்த ஊருக்கு மக்கள் வந்து இருந்தனர். அவ்வாறு தேனி மாவட்டத்துக்கு வந்து விட்டு வாக்களித்த மக்கள் பலரும் நேற்று முன்தினம் மாலையில் மீண்டும் தாங்கள் பணியாற்றும் ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.

ஆனால், அதற்கு ஏற்ப தேனியில் இருந்து வெளியூர்களுக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படவில்லை. குறிப்பாக திருப்பூர், கோவை பகுதிகளுக்கு போதிய அளவில் பஸ்கள் இயங்கவில்லை. இதனால், இந்த பகுதிகளுக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவிப்புடன் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காத்திருந்தனர்.

குறிப்பாக நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து 5 மணி வரை பஸ்கள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர். ஆனால், பயணிகள் நலன் கருதி போதிய அளவில் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பல மணி நேரம் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் நிலையத்தில் உள்ள சாலையில் அமர்ந்து பஸ்கள் இயக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் அங்கு தேனி போலீசார் வந்தனர். பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

இருப்பினும் போதிய அளவில் பஸ்கள் இயக்கவில்லை. அதன்பிறகு வந்த பஸ்களிலும் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். படிக்கட்டுகளில் அமர்ந்தும், பஸ்சுக்குள் நின்றபடியும் பயணம் செய்தனர். இந்த சம்பவம் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. வரும் காலங்களில் தேர்தல் நேரத்தில் வெளியூர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கவும், பயணிகளின் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவையான இடங்களுக்கு உடனுக்குடன் கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்