கோபியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கோபியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடத்தூர்,
கோபி ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 45). விவசாயி. இவர் கடந்த 16-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு மனைவி, மகனுடன் வெளியூருக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே ஓடிச்சென்று பார்த்தார். அப்போது வீட்டுக்குள் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 2 பவுன் கம்மல், பணம் 2 ஆயிரம், வெள்ளிப்பொருட்கள், மடிக்கணினி ஆகியவற்றை காணவில்லை.
ஆனந்த் வெளியூருக்கு சென்றபின்னர் யாரோ மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணம், வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்றது தெரிந்தது. உடனே ஆனந்த் இதுகுறித்து கோபி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்