நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 94.97 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி மாநில அளவில் 5-வது இடத்தை தக்க வைத்தது
நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 94.97 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.75 சதவீதம் குறைந்து உள்ளது. இருப்பினும் மாநில அளவிலான தேர்ச்சி விழுக்காட்டில் நாமக்கல் மாவட்டம் 5-வது இடத்தை மீண்டும் தக்க வைத்து உள்ளது.
நாமக்கல்,
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், அந்தந்த பள்ளிகளிலும் விளம்பர பலகைகளில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டு இருந்தன. அவற்றை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தின் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா நேற்று வெளியிட்டார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 201 பள்ளிகளை சேர்ந்த 22 ஆயிரத்து 727 மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை எழுதினர். இவர்களில் 21 ஆயிரத்து 584 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.97 ஆகும்.
மாணவர்களை பொறுத்தவரையில் 11 ஆயிரத்து 52 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 10 ஆயிரத்து 414 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.23 ஆகும். மாணவிகளை பொறுத்தவரையில் 11 ஆயிரத்து 675 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 11 ஆயிரத்து 170 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.67 ஆகும்.
கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி விகிதம் 95.72 சதவீதம் ஆகும். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் ஒட்டு மொத்தமாக 0.75 சதவீதம் குறைந்து உள்ளது.
அரசு பள்ளிகளை பொறுத்த வரையில் இந்த ஆண்டு 9 ஆயிரத்து 203 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 8 ஆயிரத்து 338 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.60 ஆகும். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 90.85 ஆக இருந்தது. இந்த ஆண்டு 0.25 சதவீதம் குறைந்து உள்ளது.
மாநில அளவிலான தேர்ச்சி விழுக்காட்டில் நாமக்கல் மாவட்டம் கடந்த 2 ஆண்டுகளாக 5-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டும் அதே இடத்தை தக்க வைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.