கர்நாடகத்தில் நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் 14 தொகுதிகளில் 70 சதவீத வாக்குப்பதிவு வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர்

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர்.

Update: 2019-04-18 23:00 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் மொத்தம் 28 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.

241 வேட்பாளர்கள்

இதில் தலா 14 தொகுதிகள் வீதம் 2 கட்டங்களாக ஏப்ரல் 18, 23-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி முதல்கட்டமாக பெங்களூரு தெற்கு, மத்திய பெங்களூரு, பெங்களூரு வடக்கு, பெங்களூரு புறநகர், சாம்ராஜ்நகர், கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, ஹாசன், மைசூரு-குடகு, உடுப்பி-சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, மண்டியா ஆகிய 14 தொகுதிகளில் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

இந்த 14 தொகுதிகளில் 241 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் முக்கியமாக துமகூரு தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவும், மண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும், அவரை எதிர்த்து சுயேச்சையாக நடிகை சுமலதா அம்பரீசும், ஹாசனில் தேவேகவுடாவின் பேரனும், பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணாவும் போட்டியிடுகிறார்கள்.

கிருஷ்ண பைரேகவுடா

அதுபோல் பெங்களூரு வடக்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, காங்கிரஸ் சார்பில் கிருஷ்ண பைரேகவுடா, கோலார் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா, சிக்பள்ளாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி, அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் முன்னாள் மந்திரி பச்சேகவுடா ஆகியோரும் போட்டியிடு கிறார்கள்.

தேர்தலையொட்டி வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 14 தொகுதிகளிலும் 30 ஆயிரத்து 164 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இவற்றில் மொத்தமாக 6 ஆயிரத்து 12 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டன. அந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. திட்டமிட்டப்படி நேற்று காலை சரியாக காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஓட்டுப்பதிவு தொடங்கியதும், காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமாக வரிசையில் வந்து நின்று வாக்களித்தனர். ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் வாக்களித்தனர். குறிப்பாக புதிய வாக்காளர்கள், மிகுந்த ஆர்வத்தோடு வந்து முதல் முறையாக தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு சென்றனர்.

குமாரசாமி வாக்களித்தார்

நடக்க முடியாத நிலையில் இருந்த வயதானவர்களை அவர்களின் குடும்பத்தினர் கைத்தாங்கலாக அழைத்து வந்து வாக்களித்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். மாற்றுத்திறனாளிகளும் ஓட்டுப்போடுவதில் ஆர்வம் காட்டினர். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மகளிர் வாக்குச்சாவடி வீதம் அமைக்கப்பட்டிருந்தது. மங்களூருவில் நேற்று திருமணம் நடக்கவிருந்த 4 பெண்கள் மணக்கோலத்தில் வந்து ஓட்டுப்போட்டு மணமேடைக்கு சென்றனர். இது பிற வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் ஓட்டுப்பதிவு மந்தமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

முக்கியமாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஹாசன் தொகுதியில் உள்ள தனது சொந்த கிராமமான ஹரதனஹள்ளியில் உள்ள படுவலேஹிப்பே வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர் அருகே பிடதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மனைவி அனிதா குமாரசாமி, மகன் நிகில் குமாரசாமி ஆகியோருடன் வந்து வாக்களித்தார்.

நிர்மலா சீதாராமன்

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் உள்ள தனது சொந்த ஊரான சித்தராமனஉண்டியில் உள்ள ஓட்டுச்சாவடியில் வாக்களித்தார். முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவியுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார், எச்.எஸ்.ஆர். லே-அவுட் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அது பெண்கள் மட்டுமே பணியாற்றும் வாக்குச்சாவடி என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ஜெயநகரில் வாக்குச்சாவடி எண் 54-ல் ஓட்டுப்போட்டார். துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், துமகூருவில் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார். பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தனது குடும்பத்தினருடன் டாலர்ஸ் காலனி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

வாக்கு எந்திரங்களில் கோளாறு

காலை 9 மணிக்கு 7.60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அதன் பிறகு வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்குச்சாவடிகளுக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதன் மூலம் வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்தப்படி இருந்தது.

ஒரு சில இடங்களில் மின்னணு வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்க சிறிது தாமதமானது. அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என கூறி சித்ரதுர்கா தொகுதியில் ஹொலல்கெரேயில் நகரகட்டா என்ற கிராமத்தில் பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

தேர்தல் புறக்கணிப்பு

அதேபோல் ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா சிக்கபெடகெரே கிராம மக்கள், அடிப்படை வசதிகள் உள்பட தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று கூறி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். மேலும் தங்களின் எதிர்ப்பை போராட்டம் நடத்தி வெளிப்படுத்தினர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அதிகாரிகள் முயற்சி செய்தனர். ஆனால் அதை போராட்டம் நடத்திய மக்கள் ஏற்கவில்லை.

சிக்பள்ளாப்பூர் தொகுதியில் பாகேபள்ளி தாலுகாவில் உள்ள காகனப்பள்ளி கிராமத்தினர், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால், தேர்தலை புறக்கணித்தனர்.

போலீஸ் தடியடி

பெங்களூரு பொம்மனஹள்ளி ஹொங்கசந்திரா பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரின் பெயரில் வேறு யாரோ வாக்களித்ததால், குழப்பம் ஏற்பட்டது. நாகரபாவியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியலில் 384 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

ஒரு சில இடங்களில் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. மண்டியா தொகுதியில் தொட்டஅரசினகெரே கிராமத்திற்கு சுயேச்சை வேட்பாளர் சுமலதா வாக்களிக்க சென்றார். அப்ேபாது அங்கு சுமலதா ஆதரவாளர்களுக்கும், ஜனதா தளம்(எஸ்) கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலை தடுக்கும் பொருட்டு, போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

அதேபோல் மண்டியா நகரில் உள்ள ஆதர்ஷா நகரில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கும் போலீசார் லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 14 தொகுதிகளிலும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

காலை 11 மணி நிலவரப்படி வாக்கு சதவீதம் 19.58 ஆக அதிகரித்தது. மதியம் 1 மணிக்கு 36.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 3 மணிக்கு 49.26 சதவீத வாக்குகள் பதிவாயின. மாலை 5 மணி நிலவரப்படி 14 தொகுதிகளிலும் ஒட்டு மொத்தமாக 61.84 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

அமைதியான முறையில்...

அதே நேரத்தில் சிறு சிறு மோதல் சம்பவங்களை தவிர தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. அதை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தொகுதிகளில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, ஒரு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன. அந்த அறைகளுக்கு முன்ப துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 5 கோடியே 10 லட்சத்து 59 ஆயிரத்து 103 வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல்கட்ட தேர்தல் நடை பெற்ற 14 தொகுதிகளில் சுமார் 2 கோடியே 67 லட்சத்து 51 ஆயிரத்து 893 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 1 கோடியே 35 லட்சத்து 45 ஆயிரத்து 818 பேரும், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 32 லட்சத்து 3 ஆயிரத்து 258 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 2,817 பேரும் உள்ளனர். தேர்தல் பணியில் 40 ஆயிரம் போலீசார் உள்பட 2 லட்சத்து 11 ஆயிரத்து 405 ஊழியர்கள் ஈடுபட்டனர். மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

மேலும் செய்திகள்