சிங்கம்புணரியில் சாலையில் கிடந்த பூத் சிலிப்கள்
சிங்கம்புணரியில் சாலையில் பூத் சிலிப்கள் கிடந்தன.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் உள்ள வாக்குச்சாவடி எண் 63-ல் நேற்று காலை முதலே வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்ய வந்தனர். இந்தநிலையில் வாக்காளர்கள் நின்று வாக்களிப்பதற்கு ஏதுவாக நிழற்குடை வசதி செய்யாத காரணத்தினால் வாக்காளர்கள் வெயிலில் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.
மேலும் பெண்கள், ஆண்கள் வரிசைகள் பிரிக்கப்படாமல் இருபாலரும் ஒரே வரிசையில் செல்வதால் ஒருவித நெருக்கடி ஏற்படுவதாக பெண் வாக்காளர்கள் கூறினர்.
வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க கொடுக்கப்படும் பூத் சிலிப் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. சிங்கம்புணரி பேரூராட்சியில் 11, 17-வது வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படவில்லை. மேலும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய பூத் சிலிப்கள் சாலைகளிலும், கழிவுநீர் கால்வாய்களிலும் கிடந்தன. இதுகுறித்து அதிகாரிகளிடம் வாக்காளர்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.