சேலத்தில் வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து ஓய்வுபெற்ற ஆசிரியர் சாவு மகனுடன் ஓட்டு போட வந்தபோது பரிதாபம்

சேலத்தில் மகனுடன் ஓட்டு போட வந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2019-04-18 22:15 GMT

சேலம், 

சேலம் அன்னதானப்பட்டி சண்முகாநகரை சேர்ந்தவர் சந்திரபோஸ்(வயது 68), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனது மகன் தமிழ்வாணனுடன் ஓட்டு போடுவதற்காக நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் லைன்மேடு பகுதியில் உள்ள குகை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

பின்னர் அவர்கள் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டருக்கு வெளியே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வாக்குச்சாவடி மையத்திற்கு நடந்து சென்றனர். வாக்குச்சாவடி மையம் அருகில் சென்றபோது சந்திரபோஸ் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தமிழ்வாணன் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு சந்திரபோஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக அவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் அவரது உடல் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.

மகனுடன் ஓட்டுப்போட வந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்