கொட்டாம்பட்டி அருகே திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் தற்கொலை; சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார்

திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக அந்த பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

Update: 2019-04-16 23:30 GMT
கொட்டாம்பட்டி,

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வெள்ளாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஒய்யப்பன், விவசாயி. இவருடைய மகள் ராஜலட்சுமி (வயது 24). இவருக்கும், சிவகங்கை மாவட்டம் எஸ்.வி.மங்கலத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் வீரபாண்டி (27) என்பவருக்கும் கடந்த 10-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணமான நாளில் இருந்து கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ராஜலட்சுமியை வீரபாண்டியும், அவரது தந்தையும் வெள்ளாலபட்டியில் உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதற்கிடையே அவர்கள் விட்டுச் சென்ற சிறிது நேரத்தில் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்திற்கு ராஜலட்சுமி சென்றுள்ளார். சந்தேகம் அடைந்த ராஜலட்சுமியின் தாய் பூஞ்சோலை, தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது விஷம் குடித்த நிலையில் ராஜலட்சுமி மயங்கி கிடந்தார். இதனால் மகளின் நிலை கண்டு கதறிய பெற்றோர், அவரை மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜலட்சுமி பரிதாபமாக இறந்துபோனார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தற்கொலை குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக ராஜலட்சுமியின் தந்தை ஒய்யப்பன், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மேலூர் கோட்டாட்சியர் சிவகாமி விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்