மதுராந்தகம் அருகே தி.மு.க. நிர்வாகியை வெட்டியவர் கைது

மதுராந்தகம் அருகே தி.மு.க. நிர்வாகியை வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-04-13 22:09 GMT
மதுராந்தகம்,

மதுராந்தகத்தை அடுத்த மாம்பாக்கத்தை சேர்ந்தவர் பொன் கேசவன் (வயது 55). தி.மு.க. அவைத்தலைவர். முன்னாள் கவுன்சிலருமான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் பூபாலன் என்பவரது மகன் பிரகாஷ் (40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக தெரியவருகிறது.

நேற்று முன்தினம் இரவு மதுராந்தகம் தேரடி தெருவில் தி.மு.க. பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய கேசவன் மாம்பாக்கத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது பிரகாஷ் அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தனது கையில் இருந்த கத்தியால் முகத்தில் வெட்டியதாக தெரிகிறது.

இது குறித்து கேசவனின் மனைவி மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் நேற்று காலை மீண்டும் பிரகாஷ் கேசவன் வீட்டுக்கு சென்று அவரது மகள் மற்றும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து கேசவனின் உறவினர்கள் நேற்று காலை மதுராந்தகம்- சூனாம்பேடு சாலை மாம்பாக்கத்தில் பிரகாஷை கைது செய்ய வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மற்றும் மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி பிரகாஷை கைது செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.

இதையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் பிரகாஷை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்