கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எச்சரிக்கை
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோடை வெயில் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றது. இதனால் குழந்தைகள் நலனை பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஒரு சில பள்ளிகள் தங்களுடைய பெயர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அடுத்த ஆண்டுக்கான பாடத்திட்டத்தை விடுமுறை நாட்களிலேயே வகுப்பு எடுக்க திட்டம் தீட்டி கோடை விடுமுறையிலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்கின்றனர்.
இதுகுறித்த தகவல் கிடைக்க பெற்றால் கடும் நடவடிக்கை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மீது எடுக்கப்படும். கோடை விடுமுறை என்பது மாணவர்களுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். மாணவர்களின் மனநிலையை அறிந்தே பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிறப்பு வகுப்புகள் கூடாது என கூறி உள்ளார். மாறாக ஒரு சில பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பட்சத்தில் அப்பள்ளிகளின் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் 2-ந் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. கோடைவிடுமுறை முடிந்து பள்ளி மீண்டும் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி வழக்கம்போல் செயல்படும். பள்ளி திறந்த முதல் நாளன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் போன்றவை வழங்கப்படும். விடுமுறை நாட்களில் மாணவர்கள் சேர்க்கையை மேம்படுத்த ஆசிரியர் குழுக்களை பயன்படுத்தி விளம்பரம் மற்றும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பணிகள் நடத்த தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.