ராமநாதபுரம் தொகுதி முன்னாள் எம்.பி. ரித்தீஷ் மரணம் மாரடைப்பால் உயிர் பிரிந்தது

ராமநாதபுரம் தொகுதி முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ரித்தீஷ் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார்.

Update: 2019-04-13 22:45 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46.

கானல் நீர், பெண் சிங்கம், நாயகன் உள்ளிட்ட சினிமாக்களில் இவர் நடித்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி. படத்திலும் நடித்துள்ளார். முகவை குமார், சிவக்குமார் மற்றும் ஜே.கே.ரித்தீஷ் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்ட இவர் கடந்த 2009–ல் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 2014 வரை எம்.பி.யாக பதவி வகித்தார்.

இதன் பின்னர் தி.மு.க.வில் இருந்து விலகி, ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். தற்போது அ.தி.மு.க.வில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளராக பதவி வகித்தார். துணை முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த சில நாட்களாக தேர்தல் பணியாற்றிய ரித்தீஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் வந்தார்.

பின்னர் ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக சத்திரக்குடி, போகலூர், மணக்குடி பகுதிகளில் நேற்று காலை முதல் தேர்தல் பணியில் ஈடுபட்டார். மதிய உணவுக்காக ராமநாதபுரம், ஆர்.ஆர்.சேதுபதி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். சாப்பிட்டபின் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வந்தனர். அவருக்கு இதய துடிப்பு இருப்பதாக உறவினர்கள் கூறியதையடுத்து மீண்டும் மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

இதைதொடர்ந்து ராமநாதபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உடல் பொதுமக்கள்அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் அங்கு திரளாக கூடி அஞ்சலி செலுத்தினர். மரணம் அடைந்த ரித்தீசுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஹிருத்திக் ரோசன், ஹாரிக் ரோசன் ஆகிய 2 மகன்கள் மற்றும் தானவி என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளது.

ரித்தீசின் தந்தை குழந்தைவேலு இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். நயினார்கோவில் அருகே உள்ள மணக்குடி அவரது சொந்த ஊர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்த ரித்தீஷ், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவியவர். சில மாதங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்தரியில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்றிருந்தார். தற்போது மனைவி, குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்த ரித்தீஷ் தேர்தல் பணிக்காக ராமநாதபுரம் வந்தார். வந்த இடத்தில் திடீர் மாரடைப்பால் அவர் மரணம் அடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்த தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு புறப்பட்டு வந்தனர். ரித்தீசின் நெருங்கிய உறவினரான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.ஜி.ரெத்தினம் மற்றும் குடும்பத்தினர் அவரது இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்