தமிழகத்தை தமிழர் ஆள வேண்டும் என்றால் வயநாட்டில் மலையாளி தான் போட்டியிட வேண்டும் என ராகுல் ஒப்புக்கொள்வாரா? இல.கணேசன் கேள்வி

தமிழகத்தை தமிழர் தான் ஆள வேண்டும் என்றால், வயநாட்டில் மலையாளி தான் போட்டியிட வேண்டும் என்று ராகுல் ஒப்புக்கொள்வாரா என்று பிரசாரத்தின் போது இல.கணேசன் பேசினார்.

Update: 2019-04-13 22:45 GMT
சிவகங்கை,

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து அந்த கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் சிவகங்கை அரண்மனை வாசலில் திறந்த வேனில் வாக்குகள் சேகரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அகில இந்திய கட்சிக்கு தலைவராக இருக்கும் ஒருவர் பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும். ராகுல்காந்தி நேற்று பேசிய பேச்சுக்கள் அபத்தமானது.

காங்கிரஸ் கட்சி இந்திராகாந்தி காலத்தில் இருந்து வறுமையை ஒழிப்போம் என்று சொல்லி வருகிறது. ஆனால் வறுமையை ஒழிக்கவில்லை. மோடி வறுமையை ஒழிப்பேன் என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கான திட்டங்களை சிறப்பாக தீட்டி சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் உயர என்ன செய்யவேண்டுமோ அதை செய்திருக்கிறார்.

காங்கிரஸ் ஆட்சியில் வங்கி அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலமாக குறிப்பு வரும். பெரும் பணக்காரர்களுக்கு எல்லாம் தொலைபேசி குறிப்பை வைத்தே பணம் வழங்கியிருக்கிறார்கள்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக பட்சம் 40 இடங்கள் தான் கிடைக்கும் என்று ஒரு கணிப்பு சொல்கிறது. அதனால் இவர்களால் எதையும் செய்ய இயலாது. தமிழகத்தை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று ராகுல் பேசி உள்ளதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் வயநாடு பகுதியில் இருந்து ஒரு மலையாளி தான் தேர்ந்தெடுக்கப்பட்டு செல்ல வேண்டும் என்பதை ராகுல் ஒப்புக்கொள்வாரா? ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சராக வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அவருக்கு ராசி இல்லை. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பா.ஜ.க. நகர் தலைவர் தனசேகரன், அ.தி.மு.க. நகர் செயலாளர் ஆனந்தன், அவைதலைவர் பாண்டி உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்